Home > DISTRICT-NEWS, Kanniyakumari > ஹோட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: காலாவதியான பொருள்கள் அழிப்பு

ஹோட்டல்கள், கடைகளில் அதிகாரிகள் ஆய்வு: காலாவதியான பொருள்கள் அழிப்பு

8,November, 2014

குமரி மாவட்டத்தில் ஹோட்டல்கள், கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள், பாதுகாப்பற்ற, காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

குமரி மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடைகளில் சோதனை நடத்துவதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வெள்ளிக்கிழமை சோதனையைத் தொடங்கினர். மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்களில் சோதனை நடத்தினர்.

அகஸ்தீசுவரம் வட்ட வழங்கல் அலுவலர் ஷீலா, உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் குமார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோட்டாறு பகுதியிலும், தோவாளை வட்ட வழங்கல் அலுவலர் டேவிட்ராஜ் தலைமையிலான குழுவினர் செட்டிகுளம் பகுதியிலும், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வடசேரி பேருந்து நிலையத்திலும், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுசீலா தலைமையிலான குழுவினர் டெரிக் சந்திப்பிலும் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இக்குழுவினர் சிறிய ஹோட்டல்கள், பெட்டிக் கடைகள், மருந்து கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், பாதுகாப்பற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் மற்றும் காலாவதியான பொருள்கள், தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

இச்சோதனை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.