Home > DISTRICT-NEWS, Ramanathapuram > உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு !

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு !

9,November, 2014

மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் தெட்சணாமூர்த்தி அவர்களின் உத்தரவின் பேரில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், சிறு தீனி உணவுப்பொருள் விற்கும் கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், பள்ளிகள், கிராமப்பகுதிகளில் உள்ள சிறுகடைகளில் விற்கப்படும் மிட்டாய், பட்டாணி கடலைகள், கேக், மற்றும் சிறுதீனி (ஸ்நாக்ஸ்) தின்பண்டங்கள், மற்றும் உணவுப்பொருள்களில் அளவுக்கு மீறி சாயமிடப்பட்ட உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக வந்த முறையீட்டை அடுத்து உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ரமா ராமநாதன் (பேராவூரணி), ஏ.கோபாலகிருஷ்ணன் ( சேதுபாவாசத்திரம்) இணைந்து திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருள்கள் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. உணவு விடுதிகளில் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்த விடுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாயமூட்டப்பட்ட சிறுதீனி உணவுகள் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்தனர். கடைகளில் விற்கப்பட்ட வண்ணமூட்டப்பட்ட பட்டாணி வறுவல்  கடலையை தண்ணீரில் இட்ட போது நிறம் கீழிறங்கியதை  செய்தியாளர்களிடம் செய்து காட்டினர்.

கைப்பற்றப்பட்ட கலரூட்டப்பட்ட உணவுப்பொருள் மற்றும் தண்ணீரில் இட்டதும் நிறம் மாறும் காட்சி