Home > Chennai, DISTRICT-NEWS > உணவு விடுதியை காலி செய்ய ஐகோர்ட் தடை

உணவு விடுதியை காலி செய்ய ஐகோர்ட் தடை

9,November, 2014

சென்னை : சென்னை அரசு மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கும் உணவு விடுதியை காலி செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
‘சக்தி ஆர்.கே.கேட்டரர்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:2008ல் அனுமதி:சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி வளாகத்தில் உணவு விடுதி நடத்த, 2008ல், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை யின், ‘டீன்’ அனுமதி வழங்கினார்.மாத வாடகையாக, 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, ஒதுக்கீட்டு உத்தரவில் கூறப்பட்டது. நான் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் உணவு விடுதியை நடத்தி வருகிறேன். அங்கு, 23 பேர் பணியாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளேன். பழைய சிறை வளாகத்தில், உணவு விடுதி விரிவாக்கம்செய்யப்பட்டது.கடந்த மாதம் உணவு பாதுகாப்பு அதிகாரி, உணவு விடுதிக்கு வந்து ஆய்வு செய்தார். சில குறைகளை சுட்டிக் காட்டி, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் வரை, உணவு விடுதியை மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, உணவு விடுதியை மூடினேன். பின், 3 லட்சம் ரூபாய் செலவு செய்து, குறைகளை நிவர்த்தி செய்து, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினேன். மீண்டும், உணவு விடுதியை ஆய்வு செய்து, அதை இயங்குவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினேன்.ஆனால், உணவு பாதுகாப்பு அதிகாரி வரவில்லை. நானும் ஒன்பது நாட்களுக்கும் மேலாக உணவு விடுதியை மூடி வைத்திருந்தேன். இதனால், மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
டீன் எதிர்ப்பு:மேலும், என்னிடம் இருந்து வாடகைப் பணத்தையும் பெறுவதற்கு, டீன் விரும்பவில்லை. டீனின் தூண்டுதலின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரி, ஆய்வு செய்கிறேன் என்ற போர்வையில், உணவு விடுதியை மூட வைத்திருப்பது தெரிய வந்தது.சட்ட விதிகளைப் பின்பற்றாமல், உணவு விடுதியை மூடுவதற்கு, டீன் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும், எனக்கு தெரிய வந்தது. 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளேன்.உணவு விடுதி மூடப்பட்டதால், ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனை வளாகத்தில், இயங்கும் உணவு விடுதியை ஆய்வு செய்து, இயங்குவதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட வேண்டும். உணவு விடுதியை காலி செய்ய, டீனுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை டீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதற்கிடையில், அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்த, சென்னை மருத்துவக் கல்லூரியில் இயங்கும் உணவு விடுதியை காலி செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.’மருத்துவமனையில் இயங்கும் உணவு விடுதியில் இருந்து, மனுதாரரை வெளியேற்றக் கூடாது’ என்று நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

Categories: Chennai, DISTRICT-NEWS