Home > NEWS > காலாவதியான சாக்லேட், குளிர்பானம், கேக், உணவு பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்

காலாவதியான சாக்லேட், குளிர்பானம், கேக், உணவு பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்

9,November, 2014

சென்னை மாநகராட்சி  அதிரடி நடவடிக்கை

904

சென்னை, நவ. 9–
சென்னை ராயப்பேட்டையில் உள்ள  எக்ஸ்பிரஸ் அவென்யூ  வணிக வளாகத்தில் காலாவதியான உண்ணத்தகாத முறையில் இருந்த சாக்லேட்டுகள், குளிர்பானங்கள், பழங்கள், கேக், சான்விட்ச்கள் போன்றவைகளை  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அழித்தனர்.
கடை உரிமையாளர்களுக்கு  17 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்ற வணிக வளாகங்களிலும் இதுபோன்று நடவடிக்கைகள் தொடரும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி,   சென்னை மாநகராட்சி மேயர்  சைதை துரைசாமி மற்றும் ஆணையாளர்  விக்ரம் கபூர்  ஆகியோரின் தலைமையில், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை பொதுமக்களின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ்  சாலையில் அமைந்துள்ள  எக்ஸ்பிரஸ் அவென்யூ  வணிக வளாகத்தில்   மண்டல  நல  அலுவலர்- முன்னிலையில்  4 துப்புரவு அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் 3 குழுக்களாக  பிரிந்து, மேற்படி வணிக வளாகத்தில்  உள்ள  கடைகளில் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தனர்.  இதில்   சாண்ட்விச், கேக் மற்றும்  காலிபிளவர் போன்ற பொருட்களில்    பூஞ்சைகள்    இருப்பதையும்,    சாக்லேட்,    பிஸ்கட்   போன்றவற்றில்     காலாவதியாகும் நாள்   நிறைவுற்றும் விற்பனைக்காக  வைத்திருந்ததையும்,  பழச்சாறு பிழிவதற்கு வைத்திருந்த பழங்களில் அழுகிய நிலையில் இருந்த உண்ணத்தகாதவற்றையும், பால் பாக்கெட்கள் காலாவதியாக இருந்ததையும்,  ஆய்வில் கண்டறிந்து மேற்படி அனைத்து உண்ணத்தகுதியற்ற  உணவுப்பொருட்களையும் சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம் பின்வருமாறு:
1.    85 காலாவதியான பால் பாக்கெட்
2.    115 காலாவதியான குளிர் பானங்கள்
3.    125 கிலோ அழுகிய நிலையில் உள்ள பழங்கள்           –
4.    தயாரிப்பு– காலாவதி தேதியிடப்படாத          – 250 கிலோ கேக், சான்ட்விச்கள்
5.    85 கிலோ காலாவதியான சாக்லெட்கள்                     –
6.    பூஞ்சைகள் படிந்திருந்த   110 கிலோ காய்கறிகள்                 –
7.    உணவு பாதுகாப்பு சட்டத்தின் உரிமம் பெறாமல்  இருந்த   55 கிலோ உணவுப்பொருட்கள்            –
8.     காலாவதியான  150 கிலோ இனிப்பு பண்டங்கள்         – (உண்ணத்தகாத  உணவுகள்)
இவ்வாறான பொருட்களை பறிமுதல் செய்ததுடன் சம்மந்தப்பட்ட  கடையின்  உரிமையாளர்களுக்கு  அபராதமும் விதிக்கப்பட்டது.  மேலும், சுகாதாரமற்ற நிலையில் சமையல் அறைகளை  பராமரித்து வந்த கடைகளையும்   சுகாதாரமின்மைக்காக அபராதம் விதிக்கப்பட்டது.  இவ்வாறான கடைகளில்  மொத்தம் ரூ.17 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
மேற்படி, வணிக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட  உண்ணத்தகுதியற்ற உணவுப் பொருட்களை முறைப்படி கிருமிநாசினிகள் கொண்டு  அழிக்கப்பட்டன.  இந்த வணிக  வளாகம் சுகாதாரத்துறையின் தொடர்ச்சியான  கண்காணிப்பில் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மற்ற வணிக வளாகங்களிலும்   இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories: NEWS
  1. Anbazhagan A.T
    9,November, 2014 at 8:37 pm

    சரியா?

  2. 10,November, 2014 at 7:42 am

    உணவு விற்பனை நிலயம் சுத்தம், சுகாதாரம் , உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்திற்குள் உட்பட்டது . இதில் மாநகராட்சி தலையிடுவது தவறு. உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்காதது மற்றவர்களுக்கு சாதகமாக அமைந்து விட கூடாது.

  1. No trackbacks yet.
Comments are closed.