Home > DISTRICT-NEWS, Erode > பறவை காய்ச்சல் எதிரொலி கோழிக்கடைகளில் ஆய்வு

பறவை காய்ச்சல் எதிரொலி கோழிக்கடைகளில் ஆய்வு

30,November, 2014

குமாரபாளையம்:பறவை காய்ச்சல் எதிரொலியால், குமாரபாளையம் பகுதியில் உள்ள கோழிக்கடைகளில், உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
குமாரபாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கோழிக்கடைகள் உள்ளன. மேலும், மட்டன், மீன் கடைகளும் அமைந்துள்ளன. தற்போது கேரளாவில், பறவை காய்ச்சல் நோய் தாக்கி ஆயிரக்கணக்கான வாத்துகள் இறந்துள்ளன. அவை, தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் வகையில், கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் லாரிகள், இதர வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குமாரபாளையம் பகுதியில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியின் உத்தரவின் பேரிலும், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் ஆலோசனையின்படியும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜா, முத்துசாமி ஆகியோர், அனைத்து கோழிக்கடைகளையும் ஆய்வு செய்தனர்.இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கோழிக்கடை, மட்டன் கடைகளுக்கு சென்று, சுத்தமான முறையில் கறி வெட்டி விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து கோழிகளை வாங்க வேண்டாம் என்றும், குளிர் சாதனப்பெட்டிகளில், இறைச்சிகளை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது என்றும், அறிவுரை வழங்கினர்.

Categories: DISTRICT-NEWS, Erode
  1. 1,December, 2014 at 7:28 am

    Good effort ….

  1. No trackbacks yet.
Comments are closed.