Home > NEWS > உணவு, பால் கலப்பட தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்: அமைச்சர் நட்டா

உணவு, பால் கலப்பட தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்: அமைச்சர் நட்டா

16,December, 2014

உணவு, பால் கலப்பட தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்படும்; தற்போது நடைமுறையில் உள்ள இந்தச் சட்டங்களை பரிசீலித்து அறிக்கை தரவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மக்களவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. மிதுன் ரெட்டி, பாஜக எம்.பி. சத்யபால் சிங் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நட்டா பதில் அளித்து பேசியதாவது:

உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தை விரிவாக மறுஆய்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.

உணவுக் கலப்படம் தொடர்பாக நீதிமன்றங்கள் தெரிவித்த கவலைகளையும், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் கருத்துக்களையும் அறிந்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

பால் கலப்படங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதற்கான சட்டத்தை கடுமையாக்கவும் உத்தேசித்துள்ளோம் என்றார்.

அப்போது சில உறுப்பினர்கள் எழுந்து, உணவில் கலப்படம் செய்வது மெல்லக் கொல்லும் விஷத்திற்கு சமம். பூச்சிக்கொல்லி மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை உணவு உற்பத்தி நிறுவனங்களில் குறிப்பாக கோழிப் பண்ணைகளில் ஒழுங்கின்றி பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.

அதுபோல மாடுகள் அதிகம் பால் கொடுக்க அவைகளுக்கு ஆக்ஸிடோஜன் மருந்து போடப்படுகிறது. இதை தடுக்க துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், தற்போதைய சட்டத்தை பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது. 2 நாள்களுக்கு முன்பு இந்தச் சட்டம் குறித்து பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 45 நாள்களுக்குள் அறிக்கை தரவும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. தொற்று இல்லாத நோய்கள் அதிகம் ஏற்பட கெட்ட உணவு பொருள்களும் ஒரு காரணமாகும்.

தற்போதுள்ள உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் குறைபாடும் இதற்கு ஒரு காரணம். இதற்கு மாநில அரசுகளும் காரணம். கடந்த 2013-14இல் 72,200 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 13,571 மாதிரிகளில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 10,325 மாதிரிகளை தயாரித்த நிறுவனங்கள் மீது உரிமையியல், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

Categories: NEWS