Home > DISTRICT-NEWS, The Nilgiris > அழுகிய மீன்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

அழுகிய மீன்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

22,December, 2014

கூடலூர், டிச. 20–

கூடலூரில் உள்ள ஒரு கடையில் 4–க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீஸ் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் ரபீக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட அலுவலர் டாக்டர் ரவியிடம் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஒப்படைத்தார். இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரவி கூறியதாவது:–

மாநில எல்லையில் கூடலூர் உள்ளதால் பெங்களூர் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டு உள்ளது. இந்த புகையிலை பொருட்கள் மாதிரி பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அவர் உரிய விசாரணை நடத்தி கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் தடை செய்யப்பட்டு உள்ள பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு மீறி விற்பனை செய்தால் இனிவரும் காலங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாவதியான மற்றும் அழுகிய மீன்கள் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களும் உணவு பாதுகாப்பு துறையிடம் இதுகுறித்து புகார்கள் செய்யலாம். தகவல் அளிக்கும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

  1. No trackbacks yet.
Comments are closed.