Home > DISTRICT-NEWS, Krishnagiri > ஓசூர் நகராட்சி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள், பொருட்கள் தரையில் கொட்டி அழிப்பு

ஓசூர் நகராட்சி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள், பொருட்கள் தரையில் கொட்டி அழிப்பு

4,March, 2015

ஓசூர், மார்ச்.4–
ஓசூர் நகராட்சி பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள், பொருட்கள் தரையில் கொட்டி அழிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சிலவற்றில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், உணவு பொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை காலாவதியானதாகவும், சுகாதார மற்றதாகவும் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதன்பேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜேஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று ஓசூர் நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிரி, சுந்தரமூர்த்தி, சேகர் மற்றும் அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் ஓசூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பஸ் நிலைய கடைகள், உணவகங்களில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அவர்கள் அங்கிருந்த குளிர்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அவற்றில் சில காலாவதியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உணவகங்களில் சோதனை நடத்தி அங்கு சுகாதார மற்ற முறையிலும், ரசாயன பொடிகள் கலந்தும் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தரையில் கொட்டி அழிக்கப்பட்டன. சிலவற்றை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
காலாவதியான குளிர்பானங்கள், பொருட்கள் மற்றும் ரசாயன பொடி கலக்கப்பட்ட உணவுகளை பொதுமக்கள் சாப்பிட்டால் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும்.
எனவே, அவற்றை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள், வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்ததற்கு நோட்டீசு அனுப்பப்படும் என்றும் நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Krishnagiri
  1. 5,March, 2015 at 7:42 am

    ஓசூர் பேருந்து நிலய சுகாதாரம் கவலைக்குரியது

  1. No trackbacks yet.
Comments are closed.