Home > Chennai, DISTRICT-NEWS > சென்னையில் ஓட்டல்களுக்கு சப்ளை: சுகாதாரமற்ற மாட்டு இறைச்சி 1500 கிலோ பறிமுதல்

சென்னையில் ஓட்டல்களுக்கு சப்ளை: சுகாதாரமற்ற மாட்டு இறைச்சி 1500 கிலோ பறிமுதல்

12,December, 2014

சென்னையில் ஓட்டல்களுக்கு சப்ளை: சுகாதாரமற்ற மாட்டு இறைச்சி 1500 கிலோ பறிமுதல்

சென்னை, டிச. 12–

சென்னையில் சுகாதார மற்ற மாட்டு இறைச்சி பல்வேறு பகுதிகளில் விற்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் மாட்டு இறைச்சிகளை குறைந்த விலையில் வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கின்றனர்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பெரிய ஓட்டல்களுக்கு மாட்டு இறைச்சி குறைந்த விலையில் வினியோகம் செய்யப்படுகின்றன. சுகாதார மற்ற நிலையில் ‘சீல்’ வைக்கப்படாமல் இறைச்சிகள் ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்கப்படுகிறது. இது உடல் நலத்தை பாதிப்பதோடு பொது சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.

இந்த நிலையில் வேப்பேரி கால்நடை கல்லூரிக்கு எதிரில் உள்ள இறைச்சி கடைகளுக்கு சிறிய வேனில் மாட்டு இறைச்சியை வினியோகம் செய்வதாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை மாவட்ட அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து அந்த வாகனத்தை வேப்பேரியில் மடக்கி பிடித்தனர். டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சதாசிவம், லோகநாதன், ஜெபராஜ், இளங்கோவன் ஆகியோர் அதில் இருந்த மாட்டு இறைச்சியை சோதனை செய்தனர்.

அந்த இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசியது. சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட 1500 கிலோ மாட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கொடுங்கையூர் குப்பை கொட்டும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அந்த மாட்டு இறைச்சி வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS