Home > NEWS > ஐ.எஸ்.ஐ., முத்திரையிலும் மோசடி: கருத்தரங்கில் "பகீர்’

ஐ.எஸ்.ஐ., முத்திரையிலும் மோசடி: கருத்தரங்கில் "பகீர்’

1,April, 2015

திண்டுக்கல் : ஐ.எஸ்.ஐ., முத்திரையிலும் மோசடி நடப்பதாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நுகர்வோர் உரிமை தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிவேலு முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சாம் இளங்கோ பேசியதாவது: பருப்புகளில் கேசரி பருப்பும், பெங்காயத்தில் மாவுக்கல் தூள், மிளகாய்தூளில் செங்கல்தூளும் கலக்கின்றனர். அதேபோல் மிளகில் பப்பாளி விதையும், மஞ்சள்தூளில் மரத்தூளும், காப்பித்தூளில் சிக்கரியும், தூள் வெல்லத்தில் சாக்கட்டி தூளும் கலக்கின்றனர். இதனை எளிய முறையில் கண்டறியலாம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம், என்றார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய பொருளாளர் ராஜேஷ்கண்ணன் பேசியதாவது: நடைபாதைகளில் விற்கப்படும் உணவு பொருட்களில் காலாவதி தேதி குறிப்பிடுவதில்லை. பலசரக்கு கடைகளில் பூஜை நெய்யை உணவிற்கு விற்கின்றனர். பேரிச்சம்பழத்தில் மினரல் ஆயில் தடவி விற்கின்றனர். பருப்புகளில் நிறத்தை கூட்ட சாயம் சேர்க்கின்றனர். சமீபகாலமாக ஐ.எஸ்.ஐ., முத்திரையிலும் மோசடி நடக்கிறது. ஐ.எஸ்.ஐ., தர முத்திரைக்கு கீழ் 7 இலக்கத்தில் "சிஎம்எல்" எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சிலர் மோசடி செய்கின்றனர்.

அவற்றை சிறிய கணக்கீடு மூலம் கண்டறியலாம். "டின்’ உணவு பொருட்களில் சிலர் "டின்னிற்கு’ மட்டும் ஐ.எஸ்.ஐ., முத்திரை வாங்கிவிட்டு, உணவு பொருளுக்கு வாங்குவதில்லை. இந்த மோசடி குறித்து இந்திய தர நிர்ணய நிறுவனத்திடம் புகார் தெரிவித்தால் ரூ.5 ஆயிரம் சன்மானம் கிடைக்கும், என்றார். தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார், நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் சுப்ரமணியன் பங்கேற்றனர்.

Categories: NEWS