Home > NEWS > அதிக நிறம் ஏற்றப்பட்ட உணவுவகைகளை வாங்காதீங்க! உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுறுத்தல்

அதிக நிறம் ஏற்றப்பட்ட உணவுவகைகளை வாங்காதீங்க! உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுறுத்தல்

6,April, 2015
திண்டுக்கல், ஏப்.5:

அதிக நிறம் ஏற்பட்ட உணவுப்பொருட்களை வாங்க வேண்டாம் என்றும், அவற்றை உண்பதன் மூலம் பல்வேறுநோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு தொடர்பாக முன்பு நடைமுறையில் இருந்த உணவு கலப்பட தடைச்சட்ட 1954 விதிகள் ரத்து செய்யப்பட்டு அதற்குப்பதிலாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் 5.8.2011 முதல் இந்தியா முழுவதும் அமலாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களைக் கிடைக்கச்செய்வதே இச்சட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

இதற்கான பல்வேறு விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு அத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி உணவுப்பொருள் வாங்கும்போது தயாரிக்கப்பட்ட தேதி, உபயோகிக்க உகந்த காலம் போன்றவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். பாக்கெட் மற்றும் பாட்டில்களில் விற்பனையாகும் குடிநீர், மினரல்வாட்டர் ஆகியவற்றில் ஐஎஸ்ஐ.முத்திரை உள்ளதா என்ப் பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மேலும் அயோடின் கலந்த சமையல் உப்பை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட எண்ணெய் வகைகளையே வாங்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணெய் கலந்த உணவு, எண்ணெய் பொட்டலங்கள் வாங்கும்போது அதில் அக்மார்க் முத்திரை உள்ளதா என பார்த்து பயன்படுத்த வேண்டும். பேரிச்சம்பழத்தில் மினரல் ஆயில் தடவாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடலை, பட்டாணி, துவரம் பருப்புகளை வாங்கும் போது அதன் இயல்பான நிறத்தில் உள்ளவற்றையே தேர்வு செய்து வாங்க வேண்டும்.

சாயம் சேர்க்கப்பட்ட பருப்பை வாங்க வேண்டாம். அதிக நிறம் ஏற்றப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கக்கூடாது. பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட மீன்வறுவல் போன்றவற்றை வாங்கி உபயோகித்தால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாக நேரிடும்.

குழந்தைகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவை வாங்கி கொடுக்க வேண்டாம். கடை, வீடுகளில் உணவுப்பொருட்களை சேமித்து வைத்துள்ள பகுதிகளில் எலி, பூச்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றின் எச்சங்கள் உணவுப் பொருட்களில் கலப்பதால் நோய் தொற்று ஏற்படும்.

மேலும் எலி மருந்து, பூச்சி மருந்து போன்றவற்றை உணவுப் பொருட்களுக்கு அருகில் வைக்கக்கூடாது.

உணவுப் பொருட்களை வாங்கும் போது தரம் குறைந்த கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் தங்கள் பகுதி நகர உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட நியமன அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

Categories: NEWS