Home > Coimbatore, DISTRICT-NEWS > செயற்கையாக பழுத்த ‘கார்பைடு’ மாம்பழங்கள்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்

செயற்கையாக பழுத்த ‘கார்பைடு’ மாம்பழங்கள்; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்

7,April, 2015

கோவை : செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு, பழக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் கலெக்டர் பங்களா அருகில் உள்ள தனியார் பழக்கடையில் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நுகர்வோர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், கால்சியம் கார்பைடு கற்கள் பயன்படுத்தி, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியானது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது: எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸில் உள்ள, பழக்கடையில் சோதனை நடத்தினோம். சோதனையில், ‘கார்பைடு’ கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தோம்.அக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 370 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தோம்.கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் நன்றாக பழுத்தது போல தோல் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆனால், உள்ளே பார்த்தால் செங்கனியாக இருக்கும். முகர்ந்தால் மாம்பழம் வாசனையாகவும், ருசியாகவும் இருக்காது. கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டால் தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வாந்தி – பேதி ஏற்படும். அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS