Home > NEWS > கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு கடும் கவலை

கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு கடும் கவலை

8,April, 2015

புதுடில்லி: ‘பூச்சி மருந்து போன்றவற்றை கலப்பதால், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்படுகிறது’ என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.உலக சுகாதார தினத்தையொட்டி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அமைப்பின் உதவி இயக்குனர், சந்திர பூஷன் கூறியதாவது: ‘உணவுப் பொருட்களில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும்; கலக்க வேண்டும்’ என, விதிமுறை உள்ளது; உணவுப் பொருள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதும் இல்லை; செயல்படுத்தப்படுவதும் இல்லை. உணவுப் பொருட்களில், பூச்சிக் கொல்லி மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் கலக்கப்படுகின்றன. அதோடு, ‘ஜங்க்புட்,’ மற்றும் ரசாயன பொருட்கள் கலந்த உணவுப் பொருட்களை உண்பதும் பிரச்னையை அதிகரிக்கின்றன. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உணவு, தண்ணீர் போன்றவற்றில் கலக்கப்படும் பொருட்களால், உலகம் முழுவதும், ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் இறக்கின்றனர்; இதில், 70 ஆயிரம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 2013ல், இந்தியாவில் இறந்தவர்களில், 10 சதவீதம் பேர், வயிற்றுப் போக்கால் இறந்த குழந்தைகள். நம் நாட்டில் உணவுப் பொருட்களில் மற்ற பொருட்கள் கலக்கப்படுவது, சரியாக கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால், உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே, இதை கண்காணிக்கவும், செயல்படுத்தவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தர நிர்ணயம் தொடர்பான சட்டம், மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவிலான நோய் கண்காணிப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: NEWS