Home > DISTRICT-NEWS, Namakkal > வல்வில் ஓரி விழா: சுத்தமான குடிநீர் வழங்க உணவகங்களுக்கு அறிவுறுத்தல்

வல்வில் ஓரி விழா: சுத்தமான குடிநீர் வழங்க உணவகங்களுக்கு அறிவுறுத்தல்

2,August, 2015

உணவகங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, உணவகங்கள் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில், ராமசுப்பிரமணியன், ராஜா, சதீஷ்குமார் மற்றும் சிவநேசன் ஆகியோர் கொல்லிமலையிலுள்ள சோளக்காடு, மாசி பெரியசாமி கோவில் பகுதி, எட்டுக்கை அம்மன் கோயில், நத்துகுழிப்பட்டி மற்றும் செம்மேடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வில் உணவகங்கள், ரொட்டிக் கடைகள், குளிர்பானக் கடைகள், பழக் கடைகள், பெட்டிக்+ கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது உணவகத்திலுள்ள அனைத்துப் பணியாளர்களும் தலைக்கவசம், முககவசம், கையுறை, மேலுறை அணிந்து பணிபுரியவும், சுத்தமில்லாத உணவகங்களில் சரியாக சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்தும் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சுத்தமான குடிநீர் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பழக் கடைகளில் பழங்களை மூடிய கண்ணாடி பெட்டியில் வைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மளிகை கடைகள் தரமான பொட்டலமிடப்பட்ட பொருள்கள் வாங்கவும், அதில் சரியான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற லேபிள் குறியீடுகள் இருக்குமாறு பார்த்து வாங்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

ஆய்வின் போது, காலாவதியான உணவுப் பொருள்கள் மற்றும் சரியான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரி இல்லாத அனைத்து உணவுப் பொருள்களும் மளிகை கடைகளில் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. 

மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

அதிகம் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய சாயம் கலந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. இதுபோன்ற பொருள்களை இனிமேல்  விற்பனை செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின் போது, அனைத்துக் கடைகளிலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மூலம் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் அடங்கிய துண்டறிக்கை வழங்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை முறையாக செயல்படுத்தாத சில்லறை உணவுக் கடைகளின் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம்- 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Namakkal