Home > NEWS > மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

13,August, 2015

மும்பை,
மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தரம்குறித்து புதிய ஆய்வு செய்ய மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
மேகி நூடுல்சை சாப்பிட்ட பலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறி பீகார், உத்தரபிரதேச மாநில கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேகி நூடுல்சில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக் கும் ரசாயன பொருள் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன. நெஸ்லே நிறுவனம் மேகி விற்பனையை திரும்ப பெறுவதாக அறிவித்தது.
மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மராட்டிய மாநில அரசும் தடை விதித்ததை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 9 வித மேகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், பாதுகாப்பற்றது என்றும் கூறி அதன் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், விற்பனை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதே காரணங்களின் அடிப்படையில் மராட்டிய மாநில அரசும் தடை விதித்து உள்ளது. இந்த தடை உத்தரவு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சட்டத்தின் 34-வது பிரிவுக்கு எதிரானது ஆகும்.
மேலும் இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தன்னிச்சையாகவும் இந்த தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. மேகி நூடுல்சை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவை அல்ல. எனவே மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 12-ம் தேதி நடைபெற்றபோது,   மும்பை கோர்ட்டு, விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது.
மேலும், மேலும் மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான பதில் மனுவை உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும், மராட்டிய அரசும் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, மேகி நூடுல்சுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை ஐகோர்ட்டு மேகி நூடுல்ஸ் தரம் குறித்து புதிய ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
மேகி உணவுப்பொருளில் சுவையை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவானது நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நெஸ்லே தொடர்ந்து தயாரிப்பு பணியை செய்ய அனுமதிக்கப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது. நெஸ்லே ஒவ்வொரு விதமான உணவுப்பொருட்களின், 5 மாதிரிகளை புதிய ஆய்வுக்கு அனுப்பவேண்டும். பஞ்சாப், ஐதராபாத் மற்றும் ஜெய்பூரில் உள்ள ஆய்வு மையங்களுக்கு அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories: NEWS