Home > NEWS > உணவு நிறுவன “லைசென்ஸ்’ காலக்கெடு நீட்டிப்பு: குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புலம்பல்

உணவு நிறுவன “லைசென்ஸ்’ காலக்கெடு நீட்டிப்பு: குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புலம்பல்

18,August, 2015

ஈரோடு: உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள், லைசென்ஸ் மற்றும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளதால், மேலும் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் புலம்புகின்றனர்.

மாவட்ட வாரியாக, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஹோட்டல், பேக்கரி, ரோட்டோர கடைகளில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை செய்யும் நிறுவனங்களில் உள்ள கலப்படம், தரம் போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தவிர, மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்து விற்றால், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பதால், எளிதில் தப்பி விடுகின்றனர். இந்நிலையில், ஹோட்டல்களில் அரிசியில் கலப்படம், டீக்கடைகளில் புளியங்கொட்டை மற்றும் மரத்தூள் கலப்பு, மஞ்சள் தூளில் அரிசி மாவு கலப்பு என பல பொருட்களில் கலப்படம் உள்ளது. ஒரு உணவு நிறுவனம் லைசென்ஸ் பெற்றிருந்தால், ஆண்டுக்கு ஒரு முறை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்று, ஆய்வு செய்ய முடியும். சில பெரிய நிறுவனங்கள் தவிர, பெரும்பாலான உணவுப் பொருள் நிறுவனங்கள், லைசென்ஸ் மற்றும் பதிவு செய்யாமல் இயங்கி வருகின்றன. இதில், ஈரோடு மாவட்டத்தில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய ஹோட்டல்கள், பேக்கரி, டீக்கடைகள் என உணவு, தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இதில், 11 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்துள்ளன. ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்கள், 2,000 ரூபாயும், அதற்கு குறைவாக வருவாய் உள்ள நிறுவனங்கள், 100 ரூபாயும் ஆண்டுக்கு செலுத்த வேண்டும்.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், முறையாக பதிவு செய்யப்படாத, 8,000 உணவகங்களை, பதிவு செய்ய, வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெரிய உணவு நிறுவனங்களைவிட, சாலையோர உணவகங்கள், மெஸ், வீட்டில் சிறிய அளவில் நடத்தப்படும் உணவகங்கள் அதிகம். முறைப்படி பதிவு செய்து, மாதம், 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினாலும், அதை ஏற்க மறுக்கின்றனர். இந்நிலையில், கடந்த, 4ம் தேதிக்கு மேல், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு, உணவு பாதுகாப்பு பதிவை, மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளாதால், கலப்படமும், முறையற்ற, தரமற்ற பொருள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த நீட்டிப்பு, குற்றங்கள் அதிகரிக்கவே வழி வகுக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Categories: NEWS