Home > Coimbatore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த 300கிலோ மாம்பழம் பறிமுதல்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த 300கிலோ மாம்பழம் பறிமுதல்

8,April, 2015
 

பொள்ளாச்சி, ஏப். 8:

பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒருகடையில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மார்கெட்டுக்கு கொண்டுவரப்படும் மாம்பழங்களில் பெருமளவு பழுக்காத நிலையில் காயாக இருப்பதால், அதனை எளிதில் பழுக்க வைக்க பெரும்பாலான வியாபாரிகள் கார்பைட் கற்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுபோன்று கார்பைட் கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பது தொடர்பான புகார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்தது. இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் உள்ள சில கடைகளில், கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், செல்வபாண்டி உள்ளிட்டோர் மார்க்கெட்டில் உள்ள மாம்பழக்கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மார்க்கெட்ரோட்டில் உள்ள மொத்த விற்பனை கடையில் கார்பைட் கற்கள் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவ்வாறு பழுக்கவைக்கப்பட்ட சுமார் 300கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை குப்பை கிடங்கில் கொண்டு கொட்டினர்.

கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதை தடுக்க, மாம்பழம் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசை உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் வழங்கினர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS