Home > Cuddalore, DISTRICT-NEWS > நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம் செய்ய முன்பதிவு

நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம் செய்ய முன்பதிவு

19,April, 2015

 

சிதம்பரம்: நடராஜர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் முன் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சிதம்பரம் நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 1ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தேரோட்டம், சுவாமி தரிசன உற்சவம் ஆகியவை மே மாதம் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று, சிதம்பரம் நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் குடிநீர், காய்கறி உள்ளிட்ட பொருள்கள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும். உணவு சூடான நிலையில் வழங்க வேண்டும். உணவு பண்டங்களை ஈ மற்றும் தூசுகள் விழாமல் மூடி பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அன்னதானம் செய்வோர் ஒவ்வொருவரும், தாங்கள் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உணவு மாதிரி எடுத்து வைக்க வேண்டும்.

மாதிரி உணவுகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்குட்பட்டது. அன்னதானம் செய்யும் உணவால் ஏதேனும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட அன்னதானம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தயாரிப்பு மற்றும் அன்னதானம் செய்யப்படும் இடங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வின் போது குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக அன்னதானம் செய்ய அனுமதி பெற்றவர்களும், இந்த முறை பாதுகாப்பு கருதி கட்டாயம் மீண்டும் அனுமதி பெற வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு சிதம்பரம் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் 97895 41853 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS