Home > NEWS > சமயபுரத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் – புகையிலை பொருட்கள் பறிமுதல்

சமயபுரத்தில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் – புகையிலை பொருட்கள் பறிமுதல்

19,April, 2015

 

சமயபுரத்தில் கடைளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கடைகளில் சோதனை

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதிகளில் உள்ள சில கடைகளில் காலாவதியானதும், தரமற்றதுமான திண்பண்டங்கள், உணவு பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் மண்ணச்சநல்லூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி கென்னடி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சமயபுரத்தில் உள்ள உணவகங்கள், ஸ்வீட் கடைகள், மளிகை கடைகளிலும், திருவிழாவை முன்னிட்டு போடப்பட்டிருந்த புதிய கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

பொருட்கள் பறிமுதல்

அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள், தடை செய்யப்பட்ட நிறமிகளைக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்த இனிப்பு வகைகள், கலப்பட டீ தூள், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் எடை 240 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மார்கரெட் சுசிலா மேற்பார்வையில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி உரக்கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டது. காலாவதியான பொருட்கள் தொடர்ந்து விற்கப்பட்டால் கடைக்காரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுபாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories: NEWS