Home > DISTRICT-NEWS, Namakkal > "மாம்பழத்தை இயற்கையாக பழுக்க வைக்கணும்’உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

"மாம்பழத்தை இயற்கையாக பழுக்க வைக்கணும்’உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

19,April, 2015

நாமக்கல்:""மாம்பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். கார்பைடு கல் மற்றும் எத்தியோபில் என்ற திரவம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், இயற்கையான முறையில் பழுத்த பழங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். நன்கு முதிர்ச்சி அடைந்த மாங்காய், இயற்கையாகவே, ஐந்து முதல், ஆறு நாட்களுக்குள் பழுக்கும் தன்மை கொண்டவை.ஆனால், அதற்கு முன்பாகவே, பழுக்கவைக்க பல்வேறு செயற்கை வேதிமுறைகளை கையாண்டு பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபார நோக்கில், செயற்கை முறையில் கார்பைடு கல் மற்றும் எத்தியோபில் என்ற திரவம் மூலம் பழுக்க வைத்து பயன்படுத்தும் மாம்பழங்களை உண்பதால், வயிற்று போக்கு, வாந்திபேதி, நெஞ்சு எரிச்சல், குடல் தொடர்பான நோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு இயல்பைவிட குறைந்து, உடல் பலவீனம் அடையும்.கால்சியம் கார்பைடு கல் பொதுவாக, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளடங்கியது. இவை உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை. கால்சியம், கார்பைடு கல் நீரில் நனைத்து அதன் பின், மாம்பழங்களில் பழுக்க வைக்க பயன்படுத்துகின்றனர். அவ்வாறு நீரில் நனையும்போது, அசிட்டிலின் வாயு தானாகவே உற்பத்தியாகி செயற்கை ஊக்கியாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படுகிறது.அசிட்டிலினானது, நரம்பு மண்டலம் பாதிப்பையும், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவையும் குறைக்கும் தன்மையுடையது. ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியவை. எத்திலின் என்பது இயற்கையாகவே உருவாகும் ஹார்மோன் வகையை சார்ந்தது.
பொதுமக்கள் கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிட வேண்டாம். அவ்வாறு கார்பைடு கல் மற்றும் எத்தியோபில் என்ற திரவம் மூலம் பழுக்க வைத்து பயன்படுத்தப்படும் விற்பனையாளர் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்து அழிப்பதுடன், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Categories: DISTRICT-NEWS, Namakkal