Home > DISTRICT-NEWS, Tiruchirappalli > திருச்சி காந்தி மார்க்கெட்டில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்

22,April, 2015

தமிழகம் முழுவதும் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசன் வந்துவிட்டாலே சில வியாபாரிகள் ‘கார்பைடு’ என்னும் ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்டால் வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடும். இதனை ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் எச்சரித்தும் வியாபாரிகள் அதனை கண்டு கொள்வதில்லை.

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சில கடைகளில் மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவரது தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வராஜ் ஆகியோர் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 12 மாம்பழ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 2 கடைகளில் மாம்பழங்கள் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 1 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

மேலும் இனியும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.