Home > DISTRICT-NEWS, The Nilgiris > கடைகளை முறைப்படுத்துவதில் தொய்வு

கடைகளை முறைப்படுத்துவதில் தொய்வு

24,August, 2015

ஊட்டி:ஊட்டியில், சாலையோர கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கையில், தொய்வு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில், சாலையோரங்களில் தற்காலிக ஷெட், தள்ளுவண்டி கடைகள் வைத்து, சிற்றுண்டி, தின்பண்டங்கள், பேன்சி பொருட்கள் என, பலதரப்பட்ட பொருட்களை, பலர் விற்கின்றனர். ‘பல கடைகள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாகவும், பல கடைகளில் தரமற்ற, சுகாதாரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன’ என்ற புகார் இருந்து வருகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண சாலையோர, தள்ளுவண்டிக் கடைகளை கணக்கெடுத்து, கடை நடத்துபவர்களுக்கு, ‘பயோ மெட்ரிக்’ அடையாள அட்டை வழங்கும் திட்டம் கடந்தாண்டு, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, ஊட்டியிலும், சாலையோர, தள்ளுவண்டிக் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மொத்தம், 286 கடைகள் உள்ளன என, தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், சாலையோர, தள்ளுவண்டி கடைகளை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. அத்தகைய கடைகளில், உணவுப் பண்டங்களை விற்போர் சுத்தமான முறையில் தயாரித்து, விற்க வேண்டும்; கடைகளின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்பன உட்பட பல கட்டுப்பாடுகள், இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

சாலையோர, தள்ளுவண்டிக் கடைக்காரர்கள், 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையின் பதிவு சான்றை பெற்று, தொடர்ந்து தொழில் செய்யலாம். பதிவு செய்து கொண்டவர்களுக்கு தொழில் செய்ய வங்கிக் கடனுக்கு பரிந்துரை செய்யப்படும்; கடைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அதன்படி, சாலையோர, தள்ளுவண்டிக் கடைகள், அவற்றின் உரிமையாளர்களின் விபரம், அவர்கள் செய்யும் தொழில் குறித்த முழு விபரங்களை அனுப்பியுள்ளோம்; இதுவரை, பயோ மெட்ரிக் அட்டைகள் வந்து சேரவில்லை. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.