Home > NEWS > கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

19,April, 2015

 

ராயபுரம்,

சென்னை அல்லிக்குளம் பகுதியில் இருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

சென்னை சூளை, அல்லிக்குளம் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக் கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே மாவட்ட நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரராஜன், லோகநாதன், இளங்கோவன், சிவசங்கரன், ஜெயகோபால், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் உள்ள கடைகளில் நேற்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கலப்பட டீத்தூள்

அப்போது அங்கிருந்த டீக்கடைகளில் பாதுகாப்பு இல்லாத, தரமற்ற கலப்பட டீத்தூள்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்த பெட்டிக் கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 7 கடைகளில் இருந்து 100 கிலோ கலப்பட டீத்தூள் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து உணவு பொருட்களும் கிங் பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனை அறிக்கை வந்தபிறகு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் புதைத்து அழிக்க இருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: NEWS