Home > DISTRICT-NEWS, Thanjavur > சுகாதாரமற்ற உணவு தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை விடுதலை தமிழ்ப்புலிகள் வலியுறுத்தல்

சுகாதாரமற்ற உணவு தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை விடுதலை தமிழ்ப்புலிகள் வலியுறுத்தல்

23,April, 2015

தஞ்சை, : தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் தஞ்சை நகரச செயலாளர் வெற்றி ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு உரிமம் இன்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட உணவகங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் செயல்படுகிறது. இந்த உணவகங்களில் தரம் இல்லாமல் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய உணவகங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஆயில் வகைகள், அனைத்து பெரிய உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட மீதமுள்ள ஆயில்களை குறைவான விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஏற்கனவே பயன்படுத்திய ஆயிலை மீண்டும் வாங்கி பயன்படுத்துவதால் அந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவோருக்கு உடல்நலக்கேடு ஏற்படுகிறது. அதேபோல் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் கடைகளை வைத்துக்கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு தயார் செய்வதால் சாலைகளில் இருந்து வரும் தூசிகள் படிந்து அந்த உணவை சாப்பிடுவதால் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. கோழி இறைச்சிக்கடைகளில் ஏற்கனவே வெட்டிய கோழி இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்கின்றனர். இது குறித்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க தஞ்சை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur