Home > DISTRICT-NEWS, Tirunelveli > அம்பையில் டீக்கடைகளில் போலி தேயிலை கண்டுபிடிப்பு

அம்பையில் டீக்கடைகளில் போலி தேயிலை கண்டுபிடிப்பு

16,February, 2015

அம்பை, : அம்பை பகுதியில் டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலி தேயிலையை பறிமுதல் செய்து அழித்தனர்.
அம்பை மற்றும் சுற்றுப் பகுதி டீக்கடைகளில் போலி டீத்தூள் பயன் படுத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்ட நியமன அதிகாரி கருணாகரன் அறிவுரையின் பேரில் அம்பை பகுதியில் அம்பை வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணி யன் மற்றும் அம்பை நகர உணவுப் பாதுகாப்பு அதிகாரி நாகராஜன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வண்டி மறிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள கடைகளில் போலி டீத்தூள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் இனிமேல் போலி டீத்தூள் பயன்படுத்தினால் உணவு பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
வடக்கு ரதவீதியில் உள்ள தனியார் பால் பாக்கெட் சென்டரில் போலி டீத்தூள் வினியோகிப்பதாக வந்த தகவலையடுத்து அங்கும் சோதனை யில் ஈடுபட்டனர். மேலும் அம்பைக்கு கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் இருந்து போலி டீத்தூள் மற்றும் உணவுப் பொருட்கள் வருவதாக கிடைத்த தகவலின்படி சென்னை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து வந்த எஸ்.இ.டி.சி. மற்றும் ஆம்னி பஸ்களில் அம்பை மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி கூறும்போது டீ தூள் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் பானங்கள் போலி மூலப்பொருள் கொண்டு தயாரிப்பவர்கள் மற்றும் அவற்றை வினியோகிப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli