Home > NEWS > காரைக்காலில் கலப்பட நெய் விற்பனை: கலெக்டர் எச்சரிக்கை

காரைக்காலில் கலப்பட நெய் விற்பனை: கலெக்டர் எச்சரிக்கை

22,February, 2015

காரைக்கால், பிப்.21–

காரைக்கால் மாவட்ட கலெக்டர் வல்லவன் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டுள்ளதாவது:–

பாமாயில் மற்றும் வனஸ்பதியை சேர்த்து விற்பனை செய்யப்படும் கரூர் நெய், காரைக்கால் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே சில விற்பனையாளர்கள் தடையை மீறி கரூர் நெய்யை தொடர்ந்து விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளதால் உணவு பாதுகாப்புத் துறை மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தீபம் எரிப்பதற்காக தயாரிக்கப்படும் இந்த வகை நெய்யை சில வியாபாரிகள் உணவாக விற்பனை செய்வதும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு தீபத்திற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணை வகைகளை உணவாக விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு விற்பனை செய்பவர்கள் எண்ணை பாக்கெட்டின் மீது ‘உண்பதற்கு உகந்தது அல்ல’ என்ற லேபிளை ஒட்டிய பிறகே விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், எம்.டி.எம், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று ஓட்டல் மற்றும் இதர உணவு விடுதிகளில் காய்கறிகளை கழுவாமல் சமைப்பது உணவு பாதுகாப்பு துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

அசுத்தமான முறையில் உணவு தயாரித்தால் உணவு பண்டங்களை பறிமுதல் செய்வதுடன், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், உணவு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு சார்ந்த வணிகர்கள் வியாபாரம் செய்வது குற்றம் என்பதால் அனைத்து உணவு வணிகர்களும் உடனடியாக உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப் பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories: NEWS