Home > Cuddalore, DISTRICT-NEWS > பழம் சிவந்த நிறத்தில் இருப்பதற்காக தர்பூசணியில் சிகப்பு நிற ரசாயன திரவத்தை செலுத்துவதாக புகார் அதிகாரிகள் ஆய்வு

பழம் சிவந்த நிறத்தில் இருப்பதற்காக தர்பூசணியில் சிகப்பு நிற ரசாயன திரவத்தை செலுத்துவதாக புகார் அதிகாரிகள் ஆய்வு

22,February, 2015

 

கடலூர்,

தர்பூசணிப்பழம் சிவந்த நிறத்தில் இருப்பதற்காக சிகப்பு நிற ரசாயன திரவத்தை செலுத்துவதாக வந்த புகாரைத்தொடர்ந்து தர்பூசணி கடைகளில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

சிகப்பு நிற ரசாயன திரவம்

கோடைகாலம் வந்து விட்டாலே தர்பூசணிகள் வந்து விடும். சாலையோரங்களில் தர்பூசணிகளை மலைபோல் குவித்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதை பார்க்கிறோம். மக்களும் தாகம் தணிப்பதற்காக தர்பூசணிக்கடைகளை நோக்கிச்செல்கிறார்கள். ஆனால் மக்களை கவருவதற்காக தர்பூசணிக்குள் ஊசி மூலம் ரசாயன திரவத்தை செலுத்துகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இது பற்றி கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து அதிகாரி ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தக்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தர்பூசணிக்கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த தர்பூசணி பழங்களை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். இது பற்றி டாக்டர் ராஜா கூறியதாவது:–

ஆய்வுக்கு அனுப்புவோம்

தர்பூசணி பழம் கண்ணைக்கவரும் விதத்தில் சிகப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘‘எரித்ரோசின் பி’’ என்ற சிகப்பு நிற ரசாயன திரவத்தை ஊசி மூலம் தர்பூசணிப்பழத்துக்குள் செலுத்தி விற்பனை செய்வதாக புகார் வந்தது. இந்த எரித்ரோசின் பி ரசாயன திரவமானது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாகும். அதனால் தர்பூசணி பழங்களை ஆய்வுக்காக எடுத்துள்ளோம். அவற்றில் ரசாயன திரவம் கலந்துள்ளதா? என்பதை கண்டறிவதற்காக சென்னையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்போகிறோம்.

இவ்வாறு ராஜா கூறினார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS