Home > DISTRICT-NEWS, Kancheepuram > கண்துடைப்பு உணவு பொருட்கள் மீதான நடவடிக்கை உற்பத்தி தேதி குறிப்பிடாமல் விற்பனை

கண்துடைப்பு உணவு பொருட்கள் மீதான நடவடிக்கை உற்பத்தி தேதி குறிப்பிடாமல் விற்பனை

19,February, 2015

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல், உணவு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர் என, புகார் எழுந்துள்ளது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் எப்போது தயாரிக்கப்பட்டவை என்றும், அவை காலாவதியாகும் தேதி கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்ற சட்டம் விதிமுறைகள் பல ஆண்டுகளாக அமலில் உள்ளன.

திரைமறைவு வேலை

சட்டவிரோத வியாபாரங்களை தடுக்க, மாவட்டந்தோறும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், கோடிக்கணக்கான ரூபாய் உணவுப்பொருள் வர்த்தகம், சர்வ சாதாரணமாக இங்கு நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், திரைமறைவு வேலைகளால், நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். சமீப காலமாக, குழந்தைகள் அதிகம் விரும்பும் நொறுக்கு தீனியாக, இந்த தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. விலை மலிவாக கிடைக்கும் இந்த தின்பண்டங்கள், குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

விதிமீறல்

ஆனால், இந்த தின்பண்டங்கள் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதிலும், முறைப்படி விற்கப்படுவதிலும் பல விதிமீறல்கள் உள்ளன. உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்டிக்கடைகளிலும், பள்ளிகள் உள்ள பகுதிகளிலும் சரம் சரமாக தொங்கும் இந்த தின்பண்டங்கள், காலாவதியான உணவுப்பொருட்கள் என்ற புகார் எழுந்து உள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த உணவு பண்டங்கள் எப்போது தயாரிக்கப்பட்டவை என்றும், எப்போது காலாவதியாகும் என்ற எந்த தேதியும், தயாரிக்கும் நிறுவனம் குறிப்பிடுவதே இல்லை. இவற்றை கண்காணிக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர்.

உள்ளூரில் எந்த பகுதியில் இதுபோன்ற உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதுபோன்ற காலாவதியான உணவுப் பொருட்களை உண்டு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளில் பல குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்க முடியவில்லை

எனவே, உற்பத்தியாகும் தேதியும், காலாவதியாகும் தேதியும் குறிப்பிடாமல் விற்கும் உணவு பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இதுபோன்ற விதிமுறை மீறி இயங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். ”இதுபோன்ற காரணங்களாலேயே, நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இருந்தபோதிலும், இதுபோன்ற தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

  1. 20,February, 2015 at 7:40 am

    ஊடகங்களில் வெளி வரும் செய்திகளுக்கு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  1. No trackbacks yet.
Comments are closed.