Home > DISTRICT-NEWS, Tirunelveli > புகையிலை பொருள் பறிமுதலில் முறைகேடு புகார் : உணவுத்துறை துணை இயக்குநர் விசாரணை

புகையிலை பொருள் பறிமுதலில் முறைகேடு புகார் : உணவுத்துறை துணை இயக்குநர் விசாரணை

20,February, 2015

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு புகார் தொடர்பாக நெல்லையில் துணை இயக்குநர் விசாரணை நடத்தினார்.

நெல்லை தச்சநல்லூரில் வியாபாரி ஒருவரது குடோனில் கடந்த நவம்பர் மாதம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் முறைகேடு நடந்துள்ள தாக கூறி நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தமிழக முதல்வர், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்.

அதில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் முதலில் எரிக்கப் பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட நபரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை துணை இயக்குநர் மணிமாறன் நெல்லையில் நேற்று விசாரணை நடத்தினார். தச்சநல்லூர் குடோனில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆய்வுக்கு சென்றவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேற்று ஒருநாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் யார், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு எவ்வளவு அவை அழிக்கப்பட்டதா, அதற்கான ஆதாரம் குறித்து பல்வேறுகட்ட விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இன்றும் 2வது நாளாக துணை இயக்குநர் விசாரணை நடத்துகிறார். இதுகுறித்து விசாரணை அதிகாரி மணிமாறன் கூறுகையில், முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடப்பதால் தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. விசாரணை அறிக்கை விரைவில் உயர் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

http://nellaionline.net/view/31_86508/20150220101815.html

Categories: DISTRICT-NEWS, Tirunelveli