Home > NEWS > டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம்

21,February, 2015

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
தீவிர நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் தொடர்பாக சுவரொட்டி, குறும்படங்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 54 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியும் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து, இந்த காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்காக வெளிமாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களிலும் சோதனை செய்வதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும் மாநகராட்சி பகுதியிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளன. அந்த குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், டாஸ்மாக் பார்களிலும் கொசு பரவுவதை தடுக்க வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் கதிரவன் கூறியதாவது:-
80 பேர் நியமனம்
கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டல்கள், பேக்கரிகள், 300 டாஸ்மாக் பார்கள், 1500 அங்கன்வாடி மையங்கள், அரசு மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நியமன அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட 80 பேர் கோவையில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் ஓட்டல்கள், பேக்கரிகளில் தீவிர ஆய்வு செய்து வருகிறார்கள்.
12 ஓட்டல்களுக்கு நோட்டீசு
அந்த வகையில் இதுவரை 1200-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டு உள்ளது. கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் பாதுகாப்பின்றி இருந்த 37 ஓட்டல்களில் 12 ஓட்டல்களுக்கு விளக்கம்கேட்டு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்துபவர்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைகளை ஓரிடத்தில் சேர்த்து வைக்கக்கூடாது என்றும், குடிநீரை மூடி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குடிநீரை சேமித்து வைத்து இருக்கும் தொட்டியை வாரத்துக்கு ஒருநாள் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளோம். இந்த வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு டாக்டர் கதிரவன் தெரிவித்தார்.
நிலவேம்பு கசாயம்
டெங்கு காய்ச்சலை தடுக்க சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் வருமுன் காப்போம் என்ற நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தப் படுகிறது.
கோவை மாநகராட்சி 38-வது வார்டு பீளமேட்டில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மேயர் கணபதி ராஜ்குமார் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், வடக்கு மண்டல தலைவர் சி.நடராஜன், பீளமேடு துரை, கவுன்சிலர் ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Categories: NEWS
  1. 21,February, 2015 at 10:14 am

    பூச்சி தடுப்பு நடவடிக்கைகள் உணவகங்களில் மேற்கொள்ளப்படுகிறதா ? ஆய்வின் போது இனியாவது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .

  1. No trackbacks yet.
Comments are closed.