Home > DISTRICT-NEWS, Kancheepuram > தினகரன் செய்தி எதிரொலி : சாலையோர ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தினகரன் செய்தி எதிரொலி : சாலையோர ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

22,February, 2015

தாம்பரம்: பரங்கிமலை ஒன்றியத்தில் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவது குறித்து,  ‘தினகரன்’ நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இதன் நடவடிக்கையாக, பரங்கிமலை மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி உட்பட பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முகவரி, உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லா பொருள்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. காலாவதியான 70 லிட்டர் குளிர்பானம் மற்றும் 12 கிலோ பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாலையோரம் உள்ள துரித உணவகங்களுக்கு தரத்துடனும், பாதுகாப்பாகவும் கடையை நடத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பரங்கிமலை உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமார் கூறுகையில், ‘கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களில் உற்பத்தி செய்பவரின் முழுமையான முகவரி, உற்பத்தி தேதி, காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை எங்களிடம் பெற்று கொள்ளலாம். மேலும், உற்பத்தி முகவரி, காலாவதி தேதியில்லாத பொருள்களை பொது மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.